×

நாடு முழுவதும் பன்முகத்தன்மை இருந்தாலும் தேசிய மொழியாக இந்தியை மதிக்க வேண்டும்: ஒன்றிய சுகாதார அமைச்சர் மாண்டவியா சொல்கிறார்

புதுடெல்லி: நாடு முழுவதும் பன்முகத்தன்மை இருந்தாலும் தேசிய மொழியாக இந்தியை மதிக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசியதாவது: நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. நமது பிராந்திய மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம்.

ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நாம் அனைவரும் நமது தேசிய தன்மையை வடிவமைக்க உதவும் ஒரு மொழியாக இந்தியைப் பயன்படுத்துவோம். ஒன்றிய சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரப்பூர்வ பணிகளில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அலுவல் மொழியான இந்தியைப் பரப்புவதற்கும், ஆண்டுத் திட்டத்தில் உள்ள இலக்குகளை நிறைவேற்றுவதற்கும், உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் உள்ளது.

நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது. இது நமது கூட்டு தேசியத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், ‘இந்தி மொழி இனிமையாகவும், எளிதாகவும் உள்ளது. அது நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் மட்டுமல்ல, மக்களுடன் சிறந்த முறையில் தொடர்புகொள்வதற்கும் இந்தி மொழிக்கு ஊக்கமளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

The post நாடு முழுவதும் பன்முகத்தன்மை இருந்தாலும் தேசிய மொழியாக இந்தியை மதிக்க வேண்டும்: ஒன்றிய சுகாதார அமைச்சர் மாண்டவியா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Union Health Minister ,Mandavia ,New Delhi ,Manchuk ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...